தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கலைக்க மறுத்தால் கைது நடவடிக்கை எடுக்கக்கூடும் - போலீசார் தரப்பில் எச்சரிக்கை!
நிரந்தரப் பணி கோரி ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, தேன்மொழி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.
போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும். போராட்டக்காரர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டத்தைக் கலைக்க மறுத்தால் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தெரிவித்துள்ளனர்.
இந்த உத்தரவையடுத்து, காவல்துறையினர் ரிப்பன் மாளிகை முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் தரப்பில், போராட்டத்தைக் கைவிட வேண்டும் அல்லது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்களின் இந்தப் போராட்டம், இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.