முகம் சுழிக்கும் வகையில் பெண்கள் நடனமாடியதாக காவல் அதிகாரி தொடர்ந்த வழக்கு - விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு!
டெல்லியைச் சேர்ந்த துணை காவல் ஆய்வாளர் ஒருவர், தான் ரோந்து பணி மேற்கொண்டபோது மதுபான விடுதிக்குள், 7 பெண்கள் குட்டையான ஆடை அணிந்து ஆபாச பாடலுக்கு நடனமாடியதாக குற்றம் சாட்டி வழக்குப்பதிவு செய்துள்ளார்.
அதன்படி டெல்லி பஹர்கஞ்ச் காவல் நிலையத்தில் அப்பெண்கள் மீது பொது இடத்தில் மற்றவர்களுக்கு முகம்சுழிக்க வைக்கும் வகையில் செய்யப்படும் எந்தவொரு செயலையும் குற்றமாகக் கருதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 294ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை செய்யபட்டது. அப்போது நீதிமன்றம், மதுபான விடுதியில் பெண்கள் ஆடிய நடனம் வேறு எந்த நபரையும் எரிச்சலூட்டுவதாகவோ, முகம்சுழிக்க வைத்ததாகவோ காவல் துணை ஆய்வாளர் எங்கும் கூறவில்லை என்றும் அவர் சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்ததை நிரூபிக்க தவறிவிட்டதாகவும் கூறியது.
அதோடு இந்த விவகாரத்தில் அந்தப் பெண்கள் குற்றம் இழைத்ததற்கான எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படாததால் 7 பெண்களையும் இவ்வழக்கிலிருந்து விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.