காரில் கடத்திய ரூ.2 லட்சம் குட்கா போதை பொருட்கள் பறிமுதல் - 5 பேர் கைது!
பெங்களூருவில் இருந்து கோவைக்கு காரில் கடத்திய 200 கிலோ குட்கா போதை பொருட்கள் பறிமுதல்செய்த காவல்துறையினர் 5 பேரை கைது செய்தனர்.
- ஈரோடு மாவட்டம் பவானி அருகே கோவை, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் செல்லும் மேம்பாலம் பகுதியில் நேற்று நள்ளிரவு சித்தோடு காவல்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலத்தின் கீழே இரண்டு சொகுசு கார்கள் சந்தேகத்திற்கு உரிய வகையில் நீண்ட நேரமாக நின்று இருப்பதை கண்ட போலீசார் அருகில் சென்று பார்த்தனர். அந்த காரில் வெள்ளை நிற மூட்டைகள் இருப்பதை கண்ட போலீசார் விசாரணை செய்தனர்.
பின்னர், காரில் இருந்த மூட்டைகளும் காவல்துறையினர் பிரித்து பார்த்த போது தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, காரில் பயணித்த 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணை செய்ததில் 5 பேரில், இருவர் பெங்களூருவை சேர்ந்த ரமேஷ்(47), அனில்குமார் (26),
கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த முகமது ரபிக்(39), அசாருதீன் (30) மற்றும் சிக்கந்தர் (39) ஆகிய ஐந்து பேர் என்பது தெரியவந்தது.
இதையும் படியுங்கள் : தனுஷ் நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் முக்கிய அறிவிப்பு!
இவர்கள் பெங்களூருவில் இருந்து கோவையில் உள்ள பல்வேறு கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக இரண்டு சொகுசு கார்கள் மூலமாக தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இந்த நிலையில் கர்நாடக பதிவெண் கொண்ட சிவப்பு நிற ஷிப்ட் பலேனோ கார் மற்றும் தமிழ்நாடு பதிவென் கொண்ட டாட்டா ட்ரிகர் கார் என இரண்டு கார்களையும் பறிமுதல் செய்த போலீசார் காரில் கடத்தி வரப்பட்ட மூட்டைகளில் இருந்த 200 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர், காரில் கொண்டு செல்லப்பட்ட 15,000 ரூபாய் ரொக்கபணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் காரில் கடத்திச் செல்லப்பட்ட குட்கா போதை பொருட்களை மதிப்பு 2 லட்சம் ரூபாய் என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கைது செய்த ஐந்து பேரையும் ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோபி கிளை சிறையில் அடைத்தனர்.