Sriperumbudur -ல் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் | 3 பேர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள்
உள்ளன. இங்கு வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி பகுதியில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் கஞ்சா, போதை மாத்திரை மற்றும் ஊசி ஆகிய போதை பொருட்களை விற்று வருவதாக ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, தகவலின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும்
காவல்துறையினர் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது
ஸ்ரீபெரும்புதூர் சுபத்ரா நகர் பகுதியில் 3 பேர் கஞ்சா, மற்றும் போதை மாத்திரை, ஊசி விற்றது தெரிய வந்தது.
இதையும் படியுங்கள் : சைக்கிள் ஓட்டும்போது #Phone பேசினால் 6 மாதம் சிறை… எங்கு தெரியுமா?
அப்பகுதியிலிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். ஆனால், காவல்துறையினர் தப்பி ஓட முயன்ற நபர்களை பிடித்த சோதனை செய்தனர். அவர்களிடம் 1.3 கிலோ கஞ்சா, 20க்கும் மேற்பட்ட போதை ஊசி, மாத்திரை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அந்த 3 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த 3 நபர்களும் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளை பாக்கம்
அம்பேத்கர் தெருவை சேர்ந்த காமேஷ் (23) ஸ்ரீபெரும்புதூர் பாடிச்சேரி காமராஜர்
தெருவை சேர்ந்த சூர்யா (24), ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த விஷ்ணு (26) என்பது
தெரிய வந்தது. இதையடுத்து, 3 பேர் மீதும் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது