பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு போலீசார் அனுமதி!
தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக சுமார் சுமார் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால் 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து 900 நாட்களை கடந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் அரசியல் கட்சியினர் கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரந்தூர் போராட்ட குழுவினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு (2024) அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே, நாளை மறுநாள் (ஜன. 20) பரந்தூர் கிராம மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து பேச அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டி.ஜி.பி. மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை தவெக தலைவர் விஜய் சந்திப்பதற்காக நடைபெற்று வந்த பணிகளை நேற்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், பரந்தூர் கிராம மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனால் நாளை மறுநாள் (ஜன.20) ஏகனாபுரம் கிராம மக்களை சந்தித்து விஜய் ஆதரவு தெரிவிக்கிறார். இந்த நிகழ்ச்சிக்காக 5 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.