திருடு போன நகைகளை நூதன முறையில் மீட்ட கிராம மக்கள் | வடிவேலு பாணியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!
ஐயா பட வடிவேலு பாணியில், பொக்கம்பட்டி கிராம மக்கள் திருடு போன நகைகளை மீட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெரிய பொக்கம்பட்டி கிராமத்தில், விவசாயி ராகவன்- பாண்டியம்மாள் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள் கிராமத்தில் உள்ள
தங்களது தோட்டத்திற்கு பணிபுரிய சென்றுள்ளனர். அப்போது, வீட்டினுடைய சாவியை வாசலின் மேற்புறத்தில் மறைவாக வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதனை அறிந்த மர்ம நபர்கள், அந்த சாவியை எடுத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 26 பவுன் தங்க நகை மற்றும் 25 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றனர்.
இச்சம்பவம் குறித்து சிந்து பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பறிபோன நகைகளை மீட்க வடிவேலு பட பாணியை போல், கிராமத்தினர் வினோத முறை ஒன்றை கையாண்டனர் அதாவது ஒவ்வொரு வீடுகள் தோறும் காகித உறையை அளித்து, யாராவது நகைகள் எடுத்திருந்தால் அந்த உறையினில் வைத்து விடுங்கள் என அறிவிப்பு செய்யப்படும். பின் குறிப்பிட்ட நேரம் வரை இரவில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டு கிராமப் பள்ளியில் இரண்டு பித்தளை அண்டாக்கள் வைக்கப்படும்.
அதன்பின் ஒவ்வொரு வீட்டாரும் தங்களது காகித உறையை குறிப்பிட்ட நேரத்திற்குள் அண்டாவில் போட்டுச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அக்கிராமத்தில் உள்ள அனைத்து வீட்டினரும் இரவில் குறிப்பிட்ட நேரத்திற்குள் அண்டாவில் தங்களது காகித உறையை போட்டுச் சென்றனர். பின் மீண்டும் மின்சப்ளை கொடுக்கப்பட்டு அண்டாவிலிருந்து காகித உறையை சோதனை செய்தபோது, அதில் ஒரு கவரில் 23 பவுன் தங்க நகைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் 4 சவரன் தங்க நகையும் அதனுடன் ரொக்க பணமும் கிடைக்கவில்லை .
இந்த வினோத முறையை கையாண்ட கிராமத்தினர், எஞ்சிய நகை மற்றும் ரொக்க பணம் கிடைக்கும் வரை இதே வினோத முறையை தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.