பாமக தலைவர் அன்புமணி நீதிமன்றத்தில் ஆஜர் - நீதிபதி நேரில் அழைத்ததால் பரபரப்பு!
பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணைக்காக, பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விரைந்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரையும் தனது அறையில் நேரில் ஆஜராகுமாறு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று, அன்புமணி ராமதாஸ் தனது ஈசிஆர் இல்லத்திலிருந்து நீதிமன்றம் நோக்கிப் புறப்பட்டார்.
இந்தச் சம்பவம், பாமகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசலின் உச்சகட்டமாகப் பார்க்கப்படுகிறது. பாமகவில் தலைவர் மற்றும் நிறுவனர் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக, தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான மோதல் வெட்டவெளிச்சமாகியுள்ளது. இது தொடர்பாக, பாமக நிறுவனர் தரப்பிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
அன்புமணி ராமதாஸ் கூட்டிய பொதுக்குழு கூட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி, ராமதாஸ் தரப்பிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில், அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டதாகவும், அவர் பொதுக்குழுவை நடத்த அதிகாரம் இல்லை எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கட்சி நலன் கருதி இருவரிடமும் தனியாகப் பேச விரும்புவதாகத் தெரிவித்தார். அதன்படி, இன்று மாலை 5.30 மணிக்கு தனது அறையில் இருவரும் ஆஜராக வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.
இந்தச் சந்திப்பின்போது, வழக்கறிஞர்கள், கட்சி நிர்வாகிகள் என யாருக்கும் அனுமதி இல்லை என்றும் நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். அன்புமணியை சமாதானம் செய்யும் நோக்கில் நீதிபதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இருப்பினும், உடல்நலக் குறைவு காரணமாக ராமதாஸ் இந்தச் சந்திப்பில் பங்கேற்க மாட்டார் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பு, பாமகவில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு ஒரு தீர்வைக் கொண்டுவருமா என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்து வருகின்றன.