’அன்புமணி ஆகஸ்ட் 31க்குள் விளக்கமளிக்க வேண்டும்’- ராமதாஸ் தலைமையிலான பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கெடு!
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து ராமதாசும், அன்புமணியும் இரு அணிகளாக செயல்பட்டு வருகிறனர். சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் தனது தரப்பில் பொதுக்குழுவை நடத்தி மேலும் ஒரு வருடத்திற்கு தலைவராக நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றினர்
.பதிலுக்கு ராமதாஸ் தலைமையில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி சிறப்பு பொதுக்குழு நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸ் அறிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பாமக ஒழுங்கு நடவடிக்கைகுழு அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றாச்சாட்டுகளை சுமத்தியது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் ராமதாஸ் இல்லத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் உள்ள நிர்வாகிகளான பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மக.ஸ்டாலின், துரை, சதாசிவம், நெடுஞ்கீரன், பானுமதி சத்தியமூர்த்தி, திருமலை குமாரசாமி, பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாமகவில் 9 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டமாக இதுவாகும். சுமார் இரண்டரை மணி நேரம் நடிபெற்ற இக்கூட்டத்தில் அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து ராமதாஸ் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” கடந்த 17ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுக்களை முன் வைத்து ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை அளித்தது. கட்சி விதிப்படி ஒழுங்கு நடவடிக்கை குழு இன்று கூடி அன்புமணி மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விவாதித்து அதன் அறிக்கையை எனக்கு அளித்தார்கள். இந்த குற்றச்சாட்டு குறித்து இன்று அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படுகிறது. குற்றச்சாட்டுகளுக்கு உண்டான விளக்கத்தை அவர் வரும் 31ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. துணை குடியரசு தலைவர் வேட்பாளராக பாஜக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம்” என்று தெரிவித்தார்.