நாளை மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி : கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பின் முதல்பயணம்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டு குக்கி மற்றும் மெய்தி இனக்குழுக்களுக்கு இடையே பெரும் கலவரம் மூண்டது. இந்த கலவரத்தினால் 260 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடபெயர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த கலவரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி முதல் மணிப்பூர் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ளது.
இதனிடையே மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் பிரதமர் ஒருமுறை கூட அங்கு செல்லவில்லை என எத்ரிகட்சிகள் விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி நாளை மணிப்பூர் செல்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது பயண விவரப்படி மதியம் 12.30 மணியளவில் மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்திற்கு வரும் பிரதமர் மோடி கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடுகிறார். மேலும் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படும் ரூ.7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து அங்கிருந்து பிற்பகல் 2.30 மணியளவில் மாநில தலைநகர் இம்பாலுக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு அவர் ரூ.1,200 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைப்பார், மேலும் ஒரு பொது நிகழ்ச்சியிலும் உரையாற்றுவார் என்று மணிப்பூர் தலைமைச் செயலாளர் புனீத் குமார் கோயல் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் வருகையையொட்டி மணிப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்ப்ட்டுள்ளது.