ஜம்மு காஷ்மீர் | சோனாமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் #Modi!
ஜம்மு காஷ்மீரில் சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
ஜம்மு - காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் உள்ள காகங்கீர் மற்றும் சோனாமார்க்கை இணைக்கும் வகையில் 'இசட்' வடிவ சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ரூ.2,700 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள (6.5 கிமீ நீளம்) இந்த சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.13) திறந்து வைத்தார்.
இந்த விழாவில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பிரதமர் மோடி இந்த சுரங்கப்பாதையை கட்டிய தொழிலாளர்களை சந்தித்து பேசினார். பிரதமரின் வருகையையொட்டி ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இருவழிப் பாதையாக தலா 10 மீ., அகலம் கொண்ட சிக் - சாக் வளைவுகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த சுரங்கப் பாதையில், அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ., வேகத்தில், ஒரு மணி நேரத்திற்கு 1,000 வாகனங்கள் செல்ல முடியும் என கூறப்படுகிறது.
இமயமலை புவியியலைக் கருத்தில் கொண்டு இந்த சுரங்கப் பாதை இசட் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவசர காலத்தில் உதவும் வகையில், இந்த சுரங்கப்பாதையின் அருகில் 10 மீ., அகலத்தில் மற்றொரு சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.