பிரான்ஸ் அதிபர் மெக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 வருடங்களாக போர் நடைப்பெற்று வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா இப்போரை தொடங்கியது. அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. இப்போரில் இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரேப்பிய தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதே வேளையில் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரான் போர் நிறுத்தப்பட்ட தருணத்தில் நிலம், கடல் அல்லது வான் வழியாக துருப்புக்களை அனுப்பி உக்ரைனுக்கு பாதுகாப்பு வழங்க உதவுவதற்காக உக்ரைனின் 26 நட்பு நாடுகள் உறுதியளித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரான் உடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”பிரான்ஸ் அதிபர் மெக்ரோனுடன் உரையாடல் மிகச் சிறப்பாக இருந்தது. பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாங்கள் மதிப்பாய்வு செய்து நேர்மறையாக மதிப்பிட்டோம். உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் உட்பட பல்வேறு சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். உலக அமைதியை வளர்ப்பதில் இந்தியா-பிரான்ஸ் இடையேயான கூட்டாண்மை தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும்”
என்று தெரிவித்துள்ளார்.