Money Heist வீடியோவை பகிர்ந்து காங்கிரஸை விமர்சித்த பிரதமர் மோடி - காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்!
மணி ஹெய்ஸ்ட் இணைய தொடர் வீடியோவை எடிட் செய்து காங்கிரஸ் கட்சியை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்ததையடுத்து, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் எம்பி தீரஜ் சாஹூ தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்த சோதனை குறித்து பாஜகவினர் பலரும் தங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்த விடியோ ஒன்றை பாஜக, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் சோதனையில் கைப்பற்றப்பட்ட பணத்தைக் காட்டும் காட்சிகளும், காங்கிரஸ் தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது. இந்த விடியோவைப் பகிர்ந்த பிரதமர் மோடி, “இந்தியாவில் காங்கிரஸ் கட்சி இருக்கும்போது மணி ஹெய்ஸ்ட் (இணைய தொடர்) போன்ற புனைவுகளுக்கு அவசியமில்லை, 70 ஆண்டுகளுக்கும் மேலாக கொள்ளையர்களாகத் தொடர்ந்துவரும் முன்னோடிகள் இவர்கள்" எனப் பதிவிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது X தளத்தில், “சாங் சுங்-லிங் மற்றும் அதானி குழுமம் சம்பந்தப்பட்ட சமீபத்திய விவகாரத்திலிருந்து கவனத்தை திசை திருப்ப பிரதமர் நரேந்திர மோடி முயற்சிப்பதாகவும், அது பலிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது;
“1947க்குப் பிறகு நடந்த மிகப்பெரிய கொள்ளையை நீங்கள் விளக்க வேண்டும் என்று தேசம் விரும்புகிறது. அதானி, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி மற்றும் மின் சாதனங்களின் விலையை உயர்த்தி, இந்தியாவிலிருந்து 17,500 கோடி ரூபாயை பெற்றுள்ளார். வெளிநாடுகளில் உள்ள செயல்படாத ஷெல் நிறுவனங்களின் மூலம் 20,000 கோடி ரூபாயை இந்தியாவிற்கு கொண்டு வந்து சட்டவிரோதமாக தனது பங்கு விலைகளை உயர்த்துகிறார்.
அவருக்கு வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் கடனாக கொடுக்கப்படுகிறது. எங்கோ இருந்த அவர் தற்போது உலகின் இரண்டாவது பணக்காரராக உயர்ந்துள்ளார். இந்த வளர்ச்சிக்கு எல்லாம் யார் பணம் கொடுக்கிறார்கள்?” என குறிப்பிட்டுள்ளார்.