"கும்பமேளாவில் நடந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது" - பிரதமர் மோடி இரங்கல்!
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வு ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் சந்நியாசிகள், துறவிகள், சாதுக்கள், சாத்விகள், கல்பவாசிகள், யாத்ரீகர்களை பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் நீராடி வழிபடுவார்கள். அந்த வகையில், இதுவரை 10கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று (ஜன.29) தை அம்மாவாசை என்பதால் பிரயாக்ராஜில் அமிர்த ஸ்நானம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் 2:30 மணியளவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்த நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதில் எத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகமல் இருக்கும் சூழலில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மகா கும்பமேளாவில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானதையடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்து, நிர்வாக சீர்கேடுதான் இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் நடந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளை செய்ய உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக, நான் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் பேசியுள்ளேன், மேலும் அம்மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.