“பிரதமர் மோடி, 'பலாத்கார குற்றவாளி'க்கு ஓட்டு கேட்கிறார்!” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
பிரதமர் மோடி, மத சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டு 'பலாத்கார குற்றவாளி'க்கு ஓட்டு கேட்கிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் இரண்டாவது கட்டமாக நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
மேலும் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியானது. தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதுடன், அவருக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டை ரத்து செய்து, அவர் இந்தியாவுக்கு திரும்புவதை உறுதி செய்ய வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு பிரதமர் மோடிக்கும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதினார்.
இந்நிலையில், பிரஜ்வால் ரேவண்ணா விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது X தள பக்கத்தில் விமர்சன பர்திவொன்றை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடி, 'பலாத்கார குற்றவாளி'க்கு ஓட்டு கேட்கிறார். பிரஜ்வல் ரேவண்ணா நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களை ஆபாச வீடியோக்கள் எடுத்தவர். ஆனால், நரேந்திர மோடி அந்த கற்பழிப்பாளியை ஆதரித்து, பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு வாக்களித்தால் அது எனக்கு உதவியாக இருக்கும் என மேடையில் ஓட்டு கேட்கிறார். இதன் வாயிலாக, நாட்டின் அனைத்து பெண்களையும் அவமதித்துள்ள நரேந்திர மோடி, நாட்டு பெண்களிடம் கைகூப்பி தலைகுனிந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.