ஆகஸ்ட் 11 முதல் காசி விஸ்வநாதர் கோயிலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!
ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் என்பது புகழ்வாய்ந்த சிவபெருமானின் கோயிலாகும். இது உத்தரப்பிரேதேசம் மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ளது. தினமும் பல்லாயிரம் கணக்கான மக்கள் இக்கோயிலில் வழிபாடு நடத்துகின்றனர்.
இந்த நிலையில், கோவில் நிர்வாகமானது பக்தர்களை புனித தலத்தை சுத்தமாகவும், பிளாஸ்டிக் இல்லாததாகவும் வைத்திருக்க வலியுறுத்தி, நிர்வாகம் ஆகஸ்ட் 11 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுவரொட்டிகளில், ”எந்த பார்வையாளர்களும் பிளாஸ்டிக் கொள்கலன்களுடன் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலின் புனிதத்தன்மை, தூய்மை மற்றும் பிளாஸ்டிக் இல்லாத சூழலைப் பராமரிக்க பக்தர்கள் உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆகஸ்ட் 11 முதல் பக்தர்கள் பிளாஸ்டிக் கொள்கலன்களைப் பயன்படுத்தி சிவபெருமானுக்கு தண்ணீர் வழங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ”கோயில் சார்பாக பொது விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்கனவே நடந்து வருகிறது, பார்வையாளர்கள் பிளாஸ்டிக் பாத்திரங்களில் தண்ணீர் அல்லது எந்த பிரசாதங்களையும் எடுத்துச் செல்ல வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.