சபரிமலை துவாரபாலகர் கவசங்கள் விவகாரம் - TDB விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவு!
சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னதி முன்பு உள்ள 2 துவார பாலகர் சிலைகள் மீது தங்க முலாம் பூசிய தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளது. அடுத்த இரு மாதங்களில் சபரிமலை அய்யப்பன் கோவிலின் மண்டல பூஜை காலம் துவங்கவுள்ளது. இதனை தொடர்ந்து தேவசம் போர்டு அந்த சிலைகள் மீதிருந்த தங்க முலாம் பூசிய தகடுகளை பழுது நீக்கம் செய்வதற்காக தேவசம்போர்டு நிர்வாகிகள் கழற்றி எடுத்து வாகனத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து சபரிமலைக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு ஆணையர், நீதிமன்றத்தின் முன் அனுமதி இல்லாமல், துவாரபாலகர் கவசங்கள் அகற்றப்பட்டது எனக் கூறி கேரள உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் நீதிமன்ற அனுமதி பெறாமல் தங்க முலாம் பூசிய தகடுகளை கொண்டு சென்றதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட துவாரபாலகர் கவசங்களை உடனடியாக திரும்ப கொண்டு வரும்படி திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று மீண்டும் விசாரிக்கப்பட்ட இவ்வழக்கில் தங்க முலாம் சேதமடைந்து இருந்தால் அதை கழற்றி சரி செய்ய சென்னைக்கு கொண்டு சென்றதாகவும், தங்க முலாத்தை கழற்றும் போது தந்திரி மற்றும் ஆபரண கட்டியிடம் அனுமதி பெற்றதாகவும் தேவசம் போர்டு விளக்கம் அளித்தது. மேலும் இன்று நீதிமன்றம் கேட்டிருந்த தேவசம் போர்டு அனைத்து ஆவணங்களும் ஒப்படைந்தது.
இதனை தொடர்ந்து நீதிபதிகள், கடந்த 2019 ஆம் ஆண்டு இது போன்று கொண்டு செலல்லப்பட்ட போது 42 கிலோவாக இருந்த துவாரபாலகர் கவசங்களின் எடை திருப்பி கொண்டு வரும் போது 38 கிலோவாகக் குறைந்தது எப்படி என கேள்வி எழுப்பினர்.
மேலும் இந்த விவகாரத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள நீதிமன்றம் இது குறித்து விசாரிக்குமாறு தேவசம் விஜிலென்ஸுக்கு உத்தரவிட்டுள்ளது.