அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடல் தகுதி மருத்துவப் பரிசோதனை தொடக்கம்!
மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் காளைகளுக்கான உடல் தகுதி மருத்துவப் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கும் பணி இன்று தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. ஜனவரி 15ந் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.
இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகளை கால்நடை துறையினர் பரிசோதனை செய்தனர். திருப்பரங்குன்றம் விளாச்சேரி கால்நடை மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான காளைகளை கால்நடை துறையினர் பரிசோதித்து சான்றிதழ் அளித்த பின்னரே, ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதிக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் தகுதி பரிசோதனை நேற்று தொடங்கியது.
இந்த பரிசோதனையில் காளைகளின் கொம்பு, உயரம் 132செமீ, திமில் அளவு, 4 பற்கள் , காளைகள் 3 முதல் 8 வயதிற்கு உட்பட்டு உள்ளதா போன்ற பரிசோதனைகளுக்கு பின்னரே சான்றிதழ் அளிக்கப்படுகிறது.