தேஜஸ் போர் விமானத்தில் பறக்கும் பிரதமர் மோடியின் படம் போலியானது - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பதிவு!
25,000 அடி உயரத்தில் கண்ணாடி மூடாமல் ஏர்ஃபோர்ஸ் ஜெட் விமானத்தில் பறக்கும் மோடியின் படம் போலியானது என்று ஒரு விமானப்படை அதிகாரி தன்னிடம் கூறியதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு எச்.ஏ. எல். எனப்படும் , பாதுகாப்பு பொதுத்துறை மற்றும் விண்வெளி நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் செயல்படுகிறது. இந்நிறுவனம், ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள், இலகு ரக ஹெலிகாப்டர்கள், இலகு ரக போர் விமானங்கள் ஆகியவற்றை தயாரித்து வடிவமைத்து வருகிறது.
இந்நிறுவனத்திடம் எஸ்.யூ 30 எம்.கே. ஐ. ரக போர் விமானங்களை வாங்கிட மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இது தொடர்பாக அங்கு நடைபெற்று வரும் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய நவ.25-ம் தேதி காலை பிரதமர் மோடி பெங்களூரு சென்றார். இதனை தொடர்ந்து ஆய்வுகளுக்கு பின், பிரதமர் மோடி இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.
பிரதமர் மோடி விமானத்தில் பயணம் செய்த விடியோக்கள் இணையத்தில் வைரலானது. இதில் பிரதமர் மோடி மாஸ்கினை கழட்டி கை அசைத்து வருவார். இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பலரும் விமரிசித்து வந்தனர். இந்த வீடியோ காட்சி, பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் காட்சி போன்றே இருப்பதாக காட்சி படுத்தப்பட்டது.
An Airforce officer today spoke to me to say that picture of Modi flying in a Airforce Jet without the glass cover 25,000 feet above and waving out, is fake because at that height Modi would have been sucked out by the atmosphere and fallen to the ground. Will PMO deny this?
— Subramanian Swamy (@Swamy39) November 27, 2023
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
”25,000 அடி உயரத்தில் கண்ணாடி மூடாமல் ஏர்ஃபோர்ஸ் ஜெட் விமானத்தில் பறக்கும் மோடியின் படம் போலியானது என்று ஒரு விமானப்படை அதிகாரி இன்று என்னிடம் பேசினார். ஏனெனில் அந்த உயரத்தில் பிரதமர் வளிமண்டல அழுத்தத்தால் தரையில் விழுந்திருப்பார். இதை PMO மறுக்குமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.