அதிமுக பொதுசெயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததை ரத்து செய்ய கோரி மனு!
அதிமுக பொதுசெயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததை ரத்து செய்ய கோரி மனுதாக்கல் செய்யட்டுள்ளது.
அதிமுகவில் ஒபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் பிரிந்த பிறகு, கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக் கோரி ஒபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்பதால், கட்சியின் பொதுச் செயலாளராக அவர் பொறுப்பேற்றார்.
இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. மேலும், தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அதிமுக பொதுசெயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது செல்லாது என அறிவிக்கக்கோரி அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே. சி. பழனிசாமி மனுதாக்கல் செய்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:
"கட்சி விதிகளில் மாற்றம் செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால் அந்த விவரத்தை உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்திலும் எடப்பாடி மறைத்துவிட்டார். பொதுக் குழு தீர்மானத்தை எதிர்த்து எந்த வழக்கும் தாக்கல் செய்யபடவில்லை என்று உச்சநீதிமன்றத்திலும் பொய்யான தகவல் கூறியுள்ளார்.
மேலும், இது வரை நடந்த வழக்குகளும், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என்ற இரு தனி நபர்களுக்கு இடையில் அதிகாரப் போட்டிக்காக நடைபெற்ற வழக்குகள் ஆகும். சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக கட்சி தொடர்பான சிவில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை பொதுசெயலாளராக அங்கீகரித்து தன்னிச்சையாக முடிவு எடுக்க அதிகாரம் கிடையாது.
இதையும் படியுங்கள்: நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் – கடும் நடவடிக்கை எடுக்க துரை வைகோ வலியுறுத்தல்!!
மேலும் சின்னங்கள் ஒதுக்கீடு விதிகள் 1968 கீழ் மனு தாக்கல் செய்தால் மட்டுமே தேர்தல் ஆணையம் கட்சி சம்பந்தமான விவகாரங்களில் தலையிட முடியும். எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் முடிவை அறிவிக்கும் முன்பு அடிப்படை உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.பழனிசாமி ஆகியோர் அளித்த 9 மனுக்களை ஆணையம் கருத்தில் கொள்ளாமல் முடிவை அறிவித்துள்ளது.
மேலும், ஒபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு அனைத்திலும் எடப்பாடி பழனிச்சாமி விரைந்து மனு மற்றும் பதில் மனுக்கள் தாக்கல் செய்தார். ஆனால் அடிப்படை உறுப்பினர்கள் தாங்கள் தாக்கல் செய்த சிவில் வழக்கு மற்றும் இடையீட்டு மனுக்களில் 18 மாதங்கள் கடந்த நிலையிலும் ஒரு பதில் மனு கூட இபிஎஸ் தாக்கல் செய்யவில்லை. எனவே எடப்பாடியை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததை ரத்து செய்ய வேண்டும்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.