மதுரையில் #VCK கொடிக்கம்பம் அமைக்க அனுமதி!
மதுரையில் விசிக கொடி கம்பம் அமைக்க மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அனுமதி வழங்கியுள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன், வரும் அக். 2-ம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடத்த உள்ளதாகவும், இதில் பாமக மற்றும் பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கலாம் என்றும் அறிவித்திருந்தார். இதனிடையே, திருமாவளவனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று பேசிய பழைய வீடியோ ஒன்று வெளியானது. திருமாவளவன் பேசிய அந்த வீடியோவில், "ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும். கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம். எளிய மக்களுக்கும் அதிகாரம் என்றோம். இதையெல்லாம் பேசும் துணிச்சல் மிக்க கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சிதான்" என்று திருமாவளவன் பேசியிருந்தார்.
ஆனால் அந்த வீடியோ நீக்கப்பட்டது. இதுகுறித்து திருமாவளவனிடம் கேட்டபோது, அட்மினிடம் தான் கேக்க வேண்டும் எனவும், அது தான் ஏற்கனவே பலமுறை பேசியதுதான் என்றும் விளக்கம் அளித்தார். இதனிடையே மதுரை புதூர் பேருந்து நிலையம் அருகே விசிக சார்பில் இன்று (செப். 14) நடைபெறும் நிகழ்ச்சியில் திருமாவளவன் கட்சி கொடியை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக நேற்று (செப். 13) இரவு 62 அடி உயரம் கொடிக்கம்பம் நடப்பட்டது. ஆனால் அனுமதியின்றி கொடி நடப்படுவதாக கூறி போலீசார் அகற்றினர். அப்போது போலீசாருக்கு விசிகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
விசிக தொடங்கியபோது முதன்முதலில் ஏற்றப்பட்ட கொடி கம்பம் உள்ள நிலையில், புதிதாக அனுமதியின்றி வைக்கப்பட்டதால் இந்த கொடி கம்பம் வைக்கப்பட்டதால் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதுதொடர்பாக இன்று (செப். 14) மாலை செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் எம்.பி., "மாவட்ட ஆட்சியர் சங்கீதா தொடர்ச்சியாக விசிகவுக்கு எதிராக செயல்படுகிறார்" என கடுமையாக சாடினார்.
இந்நிலையில், மதுரையில் விசிக கொடி கம்பம் வைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொடி கம்பம் அமைக்க மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அனுமதி வழங்கியுள்ளார். அதனை தொடர்ந்து கொடி கம்பத்தை மீண்டும் நடும் பணிகளை விசிக கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வரும் செப்.20-ம் தேதியன்று மதுரை வரும் அக்கட்சியின் திருமாவளவன் இந்த கம்பத்தில் கொடியேற்றி வைக்கவுள்ளார்.