கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாகன பேரணிக்கு அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி கோரி, கோவை மாவட்ட பாஜக சார்பில் தொடரப்பட்ட மனுவில் பேரணிக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்குவதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் சார்பில் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நகரங்களுக்குச் சென்று தொடர்ச்சியாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு மட்டும் பிரதமர் மோடி இதுவரை 5 முறை வருகை தந்துள்ளார்.
அந்த வகையில், இன்று காலை கன்னியாகுமரிக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி அரங்கில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். மேலும், பிரதமர் மோடி வரும் 18-ம் தேதி கோவையில், வாகன பேரணி நிகழ்வில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார்.
இதனிடையே, பிரதமரின் வாகன பேரணிக்கு கோவை மாநகர காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்தது. பொதுத்தேர்வு, பாதுகாப்பு காரணங்களுக்காக வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு பாதுகாப்பு குழுவுடன் நடைபெற்ற ஆலோசனையின் போது, கோவை மாநகர காவல்துறை இந்த தகவலை தெரிவித்தது.
இந்நிலையில், பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக சார்பில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கோவையில் வருகிற 18-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
பேரணி செல்லும் வழி, தொலைவு மற்றும் நேரம் ஆகியவற்றை கோவை காவல்துறையினரே முடிவு செய்யலாம். பேரணி செல்லும் பகுதிகள், சாலைகளில் பதாகைகள் வைக்க அனுமதி இல்லை உள்ளிட்ட நிபந்தனைகள் பிரதமர் பங்கேற்கும் பேரணிக்கு விதிக்கப்பட்டுள்ளது.