வேட்டி கட்டியவருக்கு அனுமதி மறுப்பு - பெங்களூரு ஷாப்பிங் மாலுக்கு சீல்!
பெங்களூருவில் தனியார் வணிக வளாகத்தில் வேட்டி அணிந்து சென்ற விவசாயிக்கு அனுமதிக்க மறுக்கப்பட்டதால் அந்த வளாகத்திற்கு சீல் வைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள ஜிடி மாலில் உள்ள திரையரங்கில் படம் பார்ப்பதற்காக கர்நாடகாவின் காவேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பகிரப்பா தனது மகனுடன் நேற்று சென்றார். வெள்ளை வேட்டி சட்டையுடன், தலையில் முண்டாசு கட்டி முதியவர் பகிரப்பா வணிக வளாகத்திற்குள் சென்றுள்ளார். அப்போது மாலுக்குள் நுழைய முயன்ற முதியவரை பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை.
அவருடைய மகன் எவ்வளவோ பேசியும் "வேட்டி கட்டிவந்தால் மாலுக்குள் அனுமதிக்க முடியாது என்றும் வேட்டியை மாற்றிவிட்டு வேறு உடையில் வந்தால் அனுமதிப்பதாக" அவர்கள் தெரிவித்தனர். நீண்ட தூரத்தில் இருந்து பெங்களூர் வந்திருப்பதால் உடனே போய் ஆடையை மாற்றிக் கொண்டு வர முடியாது என அந்த முதியவரும் அவருடைய மகனும் கூறியும் அவர்கள் ஏற்க மறுத்து, அவர்களை வெளியே அனுப்பிவிட்டனர். இதனால் வேறு வழியில்லாமல் அவர்களும் வளாகத்தை விட்டு வெளியேறினர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இந்த சம்பவம் விவசாயிகளுக்கு எதிரானது என கூறி அரசை கடுமையாக சாடினர். இதையடுத்து கன்னட ஆதரவாளர்களும், கன்னட விவசாயிகளும் இந்த சம்பவத்தை கண்டித்து வேட்டி அணிந்து மாலுக்குள் நுழையும் போராட்டத்தை நடத்தினர்.
இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் கண்டனத்துக்கு உள்ளானதையடுத்து, வணிக வளாக நிர்வாகம் மன்னிப்பு கோரியது. வணிக வளாக உரிமையாளர் மற்றும் பாதுகாப்பு ஊழியர் மீது கர்நாடக காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில் அந்த வணிக வளாகத்திற்கு சீல் வைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.