For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"குரூப் டி பணியிடங்களுக்கு நிரந்தர நியமனங்களை ரத்து செய்யக் கூடாது" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

குரூப் டி பணியிடங்களுக்கு நிரந்தர நியமனங்களை ரத்து செய்யக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
12:05 PM Apr 22, 2025 IST | Web Editor
 குரூப் டி பணியிடங்களுக்கு நிரந்தர நியமனங்களை ரத்து செய்யக் கூடாது    அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Advertisement

குரூப் டி பணியிடங்களுக்கு நிரந்தர நியமனங்களை ரத்து செய்யக் கூடாது எனவும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

Advertisement

"தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இனி அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அனைத்து குரூப் டி பணியாளர்களையும் நிரந்தரமாக நியமிக்கக்கூடாது என்றும், ஒப்பந்தம் அல்லது அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் தான் நியமிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு ஆணையிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தற்காலிக நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், நிரந்தரப் பணியிடங்களையும் ஒப்பந்தப் பணியிடங்களாக தமிழ்நாடு அரசு மாற்றி வருவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் குரூப் டி பணியாளர்களில் பெரும்பான்மையினர் குத்தகை முறையில் தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுவதால் மிகப்பெரிய அளவில் மனிதவளச் சுரண்டல்கள் நடைபெறுகின்றன; இன்னொருபுறம் குத்தகை முறையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவதால் அவர்கள் இழைக்கும் தவறுகளுக்கு அவர்களை பொறுப்பேற்கச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் பராமரிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும். உயர்கல்வி நிறுவனங்களிலும், சில பொதுத்துறை நிறுவனங்களிலும் மட்டும் நடைமுறையில் உள்ள குத்தகை முறை நியமனங்களை அனைத்துத் துறைகளுக்கும் நீட்டிக்கவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் பணியிடங்கள் ரத்து செய்யப்படும் நிலை உருவாகும். இது திமுக அளித்த வாக்குறுதிகளுக்கு எதிரானது ஆகும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்த தற்காலிக பணியாளர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்; மூன்றரை லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும்; இரண்டு லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது மட்டுமின்றி அதற்கு முற்றிலும் மாறாக, இருக்கும் பணியிடங்களை ஒழிப்பது, நிரந்தர பணியிடங்களை ஒப்பந்த பணியிடங்களாக மாற்றுவது போன்ற செயல்களில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, இத்தகைய நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படுவதில்லை என்பதால் இது சமூகநீதிக்கும் எதிரானது ஆகும். எனவே, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் குரூப் டி பணியிடங்களை ஒழித்து விட்டு, குத்தகை நியமனங்களுக்கு அனுமதி அளித்து உயர்கல்வித்துறை மூலம் கடந்த 3ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள 66ம் எண் கொண்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அனைத்துத் துறைகளிலும் குரூப் டி பணியிடங்கள் நிரந்தர அடிப்படையிலேயே நியமிக்கப்படும் என்றும் அரசு அறிவிக்க வேண்டும்"

இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement