பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் - ஆடி வெள்ளியை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்!
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில் சுயம்புவாக எழுந்தருளிய அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த கோயிலுக்கு அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி மாதம் முதல் வாரம் தொடங்கி 14 வாரங்கள் இந்த பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் விழா கோலம் பூண்டிருக்கும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா என அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆடி மாதத்தில் அம்மனை தரிசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, ஸ்ரீ பவானி அம்மனுக்கு அதிகாலை முதல் பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
கோயிலுக்கு மஞ்சள் சேலையில் பெண் பக்தர்கள் பாதயாத்திரையாக அதிக அளவில் குவிந்ததால் சுமார் 2 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே அதிகளவு பக்தர்கள் வாகனத்தில் வந்ததால் சென்னை, திருப்பதி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 1 மணி நேரம் வாகனங்கள் ஊர்ந்து சென்றது.