”மக்களின் கோபம் பாஜக ஆட்சியை சாம்பலாக்காமல் விடாது” - செல்வபெருந்தகை பதிவு!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி 2.0 வை வெளியிட்டுள்ளார். இதன்படி ஜிஎஸ்டி வரி எளிமையாக்கப்பட்டுள்ளது. 5%, 12%, 18% மற்றும் 28% ஆக இருந்த ஜிஎஸ்டி வரி அடுக்குகள் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்ககளாக குறைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீர்த்திருத்தங்கள் வரும் 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்திருக்கின்றன. அதே வேளியில் 8 ஆண்டுகள் தாமதமானது ஏன் எனவும் எதிர்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன
இந்த நிலையில் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப. சிதம்பரம் எம்.பி., அவர்கள் ஜிஎஸ்டி குறைப்பு குறித்து கூறியிருப்பது சாதாரணமான விமர்சனம் அல்ல, அது மக்களின் அனுபவித்த கொடிய துன்பத்தை எடுத்துக் காட்டுகிறது. எட்டு ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி எச்சரித்ததே இதுதான் – ஜிஎஸ்டி மக்களின் முதுகெலும்பை முறிக்கிறது, வணிகர்களின் கனவுகளை நொறுக்கிறது, நடுத்தர மக்களின் உயிரையே சுரண்டுகிறது, ஏழைகளின் அடிப்படை வாழ்வையே பறிக்கிறது.
ஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசு, எட்டு ஆண்டுகள் முழுவதும் செவிடாய் நடித்து வந்தது. இன்று மக்களின் கோப அலைக்கும் உண்மையின் நெருப்புக்கும் முன் தாங்க முடியாமல் பின்வாங்குகிறது. ராகுல் காந்தி அவர்கள் முன்னரே: 'ஜிஎஸ்டி மக்களுக்கான நிவாரணம் அல்ல, அது பாஜக அரசின் கொள்ளைக் கருவி' என்று தீவிரமாகக் கூறியிருந்தார். அந்த வார்த்தைகள் இன்று இடிமுழக்கம் போல் முழங்கி, பாஜக அரசின் பொய்முகமூடியைச் சிதறடிக்கின்றன.
மக்களின் உழைப்பை கொள்ளையடித்து, இரத்தமும் வியர்வையும் பிழிந்து, தங்களின் கருவூலத்தை நிரப்பிக் கொண்ட இந்த அரசு, இப்போது மக்களின் எழுச்சியால் குலுங்குகிறது. மக்களின் கோபம் பாஜக அரசை அரசியல் மேடையிலிருந்து சாம்பலாக்கும். சிறு சலுகைகளால் மக்களின் வேதனை அடங்காது. ஜிஎஸ்டி குறைப்பு முழுமையாக செய்யப்பட வேண்டும்.
மக்களின் வாழ்வைத் தொடும் ஒவ்வொரு அத்தியாவசியப் பொருளிலும், ஒவ்வொரு சேவையிலும் இந்த சுரண்டல் வரி முற்றிலும் அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் மக்கள் குரல் போர்க் குரலாக வெடித்து, பாஜக ஆட்சியை வரலாற்றின் குப்பைத்தொட்டியிலே தள்ளித் தீர்க்கும். மக்களின் குரல் இனி ஒலியல்ல. அது நெருப்பு. அந்த நெருப்பு பாஜக அரசின் ஆட்சியை சாம்பலாக்காமல் விடாது"
என்று தெரிவித்துள்ளார்.