பள்ளி மாணவர்களின் கனவை நனவாக்கிய தலைமை ஆசிரியர்... குவியும் பாராட்டு!
தூத்துக்குடி பண்டாரம் பட்டி பகுதியில் நாசரேத் திருமண்டலத்திற்கு சொந்தமான அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த நெல்சன் பொன்ராஜ் பணிபுரிந்து வருகிறார். நல்லாசிரியர் விருது பெற்ற இவர், ஏழை எளிய மாணவர்கள் பயின்று வரும் இந்த பள்ளியை டிஜிட்டல் மையமாக மாற்றி மாணவர்களுக்கு கணினி கல்வியை கற்றுத் தருகிறார். மேலும், இவர் தனது சொந்த செலவில் பள்ளியில் பல்வேறு புதிய கட்டிடங்களை கட்டியுள்ளார்.
தொடர்ந்து, ஏழை எளிய மாணவர்களின் கனவை நினைவாக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தனது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் என 20 பேரை சென்னைக்கு விமானம் மூலம் அனைத்து சென்று, அங்கு சுற்றிக்காட்டினார். இந்த நிலையில், இன்று தனது பள்ளியில் படிக்கும் 11 மாணவ மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் 6 பேர் ஒரு ஆசிரியர் என 20 பேரை நெல்சன் பொன்ராஜ் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பகுதிகளை சுற்றிக்காட்டினார்.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் நல்லாசிரியர் பொன்ராஜை பாராட்டினார். தொடர்ந்து, மாணவர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், "விமானத்தில் பயணம் செய்வது அனைவருடைய கனவு. நானே யுபிஎஸ்சி தேர்வில் தேர்வான பின்பு தான் விமானத்தில் பயணம் செய்தேன். தற்போது உங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ள ஆசிரியரை பாராட்டுகிறேன். இது போன்று நிறைய பேர் இந்த மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றி வருகிறார்கள். வருங்காலங்களில் இது போன்று நிகழ்வுகள் இன்னும் நடைபெற வேண்டும்" என தெரிவித்தார்.
தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் சுமார் ரூ.1.50 லட்சம் செலவு செய்து தனது மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களையும் விமானத்தில் அழைத்துச்சென்ற நூலகம், மெரினா கடற்கரை, தலைவர்களின் சமாதி, நியூஸ்7 தமிழ் தொலைகாட்சி உள்ளிட்ட இடங்களை சுற்றிக்காட்டியது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.