ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் எப்போது? மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி விளக்கம்!
ஜம்மு-காஷ்மீரில் வரும் செப்டம்பர் மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்றதும், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை அந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்தது. மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு- காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக்கியது.
இந்த 370வது சட்டப்பிரிவு 5வது ஆண்டு ரத்து தினத்தையொட்டி நேற்று ஜம்முவில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி பேசியதாவது;
“செப்டம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். 370-வது பிரிவை ரத்து செய்து, பி.ஆர். அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை ஜம்மு-காஷ்மீர் வரை நீட்டித்து, பாஜக கொண்டு வந்துள்ள மாற்றங்களைக் கருத்தில் கொண்டு மக்கள் பாஜகவை முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க வேண்டுமென காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி போன்றவை கோரி வருகின்றன. இது, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு புத்துயிரூட்டி, மீண்டும் அழிவுப் பாதைக்கு வழிவகுக்கும்.
இத்தகைய கட்சிகள் ஆட்சிக்கு வர வேண்டுமா அல்லது ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியின் புதிய உச்சங்களை எட்ட வேண்டுமென விரும்பும் பாஜக ஆட்சிக்கு வர வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
நீண்ட போராட்டத்துக்கு பிறகு 370-ஆவது பிரிவில் இருந்து ஜம்மு- காஷ்மீர் மக்கள் விடுபட்டுள்ளனர். காங்கிரஸுக்கோ, தேசிய மாநாட்டுக் கட்சிக்கோ வாய்ப்பளித்தால் மீண்டும் பயங்கரவாதமும், பிரிவினைவாதமும் தலைதூக்கும்” என்றார் அவர்.
சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளாக குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் ஜம்மு-காஷ்மீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.