For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” - தயாநிதி மாறன் எம்.பி!

05:17 PM Jul 24, 2024 IST | Web Editor
“தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்”   தயாநிதி மாறன் எம் பி
Advertisement

பாஜக அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்திருப்பதாகவும், தமிழ்நாட்டு மக்கள் பாஜக அரசை மன்னிக்க மாட்டார்கள் எனவும் திமுக நாடாளுமன்ற எம்.பி. தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்த விவாதம் மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. அப்போது பேசிய தயாநிதி மாறன் எம்.பி.,

“10 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவின் சிறப்பு அந்தஸ்துக்காக சந்திரபாபு நாயுடு 4 மாதகாலம் காத்திருந்து பிரதமரை சந்தித்தார். ஆனால், 2019-ம் ஆண்டு தேர்தல் பரப்புரையில், போலாவரம் திட்டம் சந்திரபாபு நாயுடு மற்றும் அவருக்கு ஏடிஎம் போல செயல்படுவதாக தெரிவித்தார்.

நீங்கள் உங்களுக்கு தேவை என்றால் ஒருவரை அடிமட்ட நிலைக்கு தள்ளுவீர்கள். ஆனால், நீங்கள் பிரதமராக வேண்டுமென்றால் அவரையே உயர்வாக கூறுவீர்கள். ஒரு வாரத்தில் 15 பாலங்கள் பீகாரில் சேதமடைந்து இடிபாடுகளை சந்தித்துள்ளன. அதற்கு நீங்கள் சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆணையிடாமல், ரூ.26000 கோடி நிதியுதவி அளித்து அந்த பாலங்களை சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நீங்கள் பீகாரில் நேர்மையற்ற ஆட்சிக்கு வெகுமதி அளித்துள்ளீர்கள். ஏனெனில் நீங்கள் உங்கள் பதவியை தக்க வைக்க பாடுபடுகிறீர்கள்.

பாஜக அரசு இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்திருக்கிறது என சொல்ல முடியாது. வஞ்சித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். மிகப்பெரிய துரோகத்தை தமிழக மக்களுக்கு மோடி அரசு செய்திருக்கிறது. இந்தியாவிலேயே அதிக அளவிலான வரிப்பணம், தமிழ்நாட்டிடம் இருந்து தான் மத்திய அரசுக்கு கிடைக்கிறது. ஆனால், எங்களிடம் இருந்து பெற்ற வரிப்பணத்தை எல்லாம் வாரி சுருட்டிக்கொண்டு, இன்றைக்கு தமிழகத்துக்கு எந்த நிதியையும் பட்ஜெட்டில் ஒதுக்காமல் இருக்கிறது மத்திய அரசு.

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு இதுவரை ஒதுக்கவில்லை. ஆனால் தமிழ்நாடு அரசு சொந்த நிதியில் இருந்து மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு ரூ.12,000 கோடி செலவிட்டுள்ளது. கோவையில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடி, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் தரவில்லை. தாம்பரம்-செங்கல்பட்டு உயர்மட்டச் சாலைக்கு ஒப்புதல் தரப்படவில்லை.

ஆனால், தேர்தல் வந்துவிட்டால் போதும். மோடிக்கு தமிழ்நாட்டின் நினைவு வந்துவிடுவார். பல இடங்களில் பொதுக்கூட்டம் போடுவார். தமிழக மக்களை பார்த்து சகோதர, சகோதரிகளே என வாய் நிறைய கூப்பிடுவார். சில திருக்குறள்களையும், தமிழ் பழமொழிகளையும் படித்து விட்டு செல்வார். ஆனால், பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு எதையுமே செய்ய மாட்டார். இந்த துரோகத்தை தமிழக மக்கள் என்றென்றும் மறக்க மாட்டார்கள்” இவ்வாறு தயாநிதி மாறன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement