“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இபிஎஸ்-ன் பொய்யான தகவலை மக்கள் நம்பமாட்டார்கள்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பொய்யான தகவலை தமிழ்நாடு மக்கள் நம்பமாட்டார்கள் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சைதாப்பேட்டை தாண்டா நகரில் இருந்து தலைமைச் செயலகம் வழியாக பிராட்வே வரை சொகுசு பேருந்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது :
"மருந்துகள் கையிருப்பு இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறான தகவலை கூறி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் 4 கோடியே 42 லட்சம் ஒமெப்ரஸோல் (Omeprazole)மருந்துகள் கையிருப்பு உள்ளது. அது அல்சர் போன்ற வியாதிகளுக்கு தரப்படுகிறது. ஃபோமெபிசோல் (Fomepizole) 4 கோடி 42 லட்சம் மருந்துகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உள்ளது.
இதையும் படியுங்கள் : கவின் நடிக்கும் ‘மாஸ்க்’ படத்தின் BTS புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மருந்துகள் கையிருப்பு தொடர்பாக வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மருந்துகள் கையிருப்பு தொடர்பாக வெள்ளை அறிக்கை விட தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மருந்துகள் இல்லாததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பொய்யான தகவலை தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் மேற்குறிப்பிட்ட மருந்துகள் உள்ளதா என்பதை அதிமுகவினர் கேட்டறிந்து கொள்ளலாம் . மருந்துகள் கையிருப்பு உள்ளதை காட்டினால், எதிர்க்கட்சி தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்வது அவரது தார்மீக கடமையாக இருக்கும்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.