“பாமக - பாஜக கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் தவாக தலைவர் வேல்முருகன் பேட்டி!
"பாமக, பாஜக கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள்” என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவருமான
வேல்முருகன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது:
“ சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பது தொடர்பான தமிழக வாழ்வுரிமை கட்சியின் கோரிக்கை திமுகவின் தேர்தல் அறிக்கையில் இருப்பதை சுட்டிக்காட்டினார். மத்திய அரசு நடத்தாவிட்டால், மாநில அரசே சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன். கண்டிப்பாக கோரிக்கையை பரிசீலிக்கிறேன் என்று முதலமைச்சர் கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்று தமிழக
வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்திருந்தது. கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல்
அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அதே போல் மத்திய அரசின் அலுவலகங்களிலும், தனியார் துறைகளிலும் தமிழ்நாட்டை சேர்ந்த மக்களுக்கு 90 விழுக்காடு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற்றிருக்கிறது.
உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும் என்ற
கோரிக்கையும் ஏற்கபட்டிருகிறது. குடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெற வேண்டும் என்பது, ஆன்லைன் சூதாட்டம் தடை செய்வது, மத்திய அரசு தேர்வுகளில் தமிழ் விருப்பமொழியாக இருக்க வேண்டும், இலங்கை தமிழருக்கான குடியுரிமை வழங்க வேண்டும் என்பது போன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் பல்வேறு கோரிக்கைகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
தேர்தல் வாக்குறுதிகள் அடிப்படையில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு
தெரிவித்து 40 தொகுதியிலும் வெற்றி பெற பணியாற்ற இருக்கிறோம். முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை, டெல்லி முதல்வர்
கெஜ்ரிவால் கைது செய்யப்படிருப்பது ஜனநாயக படுகொலை. தேர்தல் தேதி
அறிவிக்கப்பட்ட பின்னர் கைது நடவடிக்கை மேற்கொள்வது இந்திய அரசியல் அமைப்பு
சட்டத்தை அவமதிப்பதாகும். இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
பாமக - பாஜக கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள். பாமகவின் சமூகநீதி கொள்கைக்கு எதிரான கொள்கை கொண்ட பாஜகவுடன், அவர்கள் கூட்டணி வைத்துள்ளனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் சண்டை வரும் என சொன்ன அண்ணாமலையுடன் பாமக வைத்துள்ள கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள். அதேபோல் பொன்முடி பதவி ஏற்பு விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு உச்சநீதிமன்ற கண்டனம் தெரிவித்து இருப்பது வரவேற்கைத்தக்கது” என அவர் கூறினார்.