"தமிழ்நாட்டை பற்றி தெரியாதவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது" - அமைச்சர் ரகுபதி!
புதுக்கோட்டையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "2026 தேர்தலுக்குப் பின் பாஜக தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போகுமே தவிர எங்களது தலைவரோ, திமுகவோ காணாமல் போக மாட்டார்கள். மீண்டும் திமுகவின் 2.0 தொடரும்.
விஜயின் வெறுப்பை இதுபோன்று வெளிப்படுத்தி இருக்கிறாரே தவிர பொதுமக்கள் மத்தியில் எந்த ஒரு வெறுப்பும் இல்லை. விவசாயிகளுக்கு இழப்பீடு ஏற்படும் போது அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக சொல்லவில்லை.
நயினார் நாகேந்திரன் அவருக்கு கொடுத்த தலைவர் என்ற பதவியை தக்க வைப்பதற்காக எதை வேண்டுமென்றாலும் பேசி வருகிறார். புதிய கூட்டணிகள் அவர்களிடத்தில் செல்ல போவதில்லை. சிறுபான்மையினர் மக்களை ஒட்டுமொத்தமாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கும், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களை நீக்குவதற்கும், தேர்தல் ஆணையத்தின் மூலமாக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதை எந்த காலத்திலும் திமுக கேட்கவில்லை.
ஒரு வாக்காளரை இந்திய குடிமகனா, இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது ஒட்டுமொத்தமாக நமது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. தமிழ்நாட்டை பற்றி தெரியாதவர்களை ஒரே இடத்தில் நிரந்தரமாக இல்லாதவர்களை எல்லாம் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்பதுதான் எங்களது கருத்து என்று தெரிவித்துள்ளார்.