தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசியதால் மக்கள் அவதி!
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசியதால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
நாடு முழுவதும் கோடை வெயில் தகித்து வருகிறது. இந்த முறை கோடை தொடங்குவதற்கு முன்பே வெப்பம் அதிகரித்த நிலையில், நாட்கள் ஆக ஆக வெயிலின் தாக்கம் வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை வெயிலின் தாக்கம் ஊட்டியை கூட விட்டுவைக்கவில்லை. கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 84°F வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் ஊட்டிக்கு சென்ற சுற்றலாப்பயணிகளும் வெயிலில் குடை பிடித்துக்கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், இன்று கரூர் பரமத்தியில் அதிகப்பட்சமாக 111.2 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூரில் 110.66 பாரன்ஹீட் வெப்பநிலையும், ஈரோட்டில் 110.48 பாரன்ஹீட் வெப்பநிலையும், திருச்சியில் 109.58 பாரன்ஹீட் வெப்பநிலையும், திருத்தணியில் 108.5 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் 106.7 பாரன்ஹீட் வெப்பநிலையும், மதுரையில் 106.52 பாரன்ஹீட் வெப்பநிலையும், நாமக்கல்லில் 105.8 பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.தஞ்சையில் 105.8 பாரன்ஹீட் வெப்பநிலையும், சென்னையில் 105.26 பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவான நிலையில், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
அதோடு, இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக பிஹார், மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதில், நாட்டிலேயே அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்தில் உள்ள ரெண்டசிந்தலா என்ற இடத்தில் 115.16°F வெப்பம் பதிவாகி உள்ளது. அதேபோல் ஜார்கண்ட், ஒடிசா, தெலுங்கானா, கடலோர ஆந்திர மற்றும் ராயலசீமாவில் வெப்ப அலை வீசி உள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டில் கரூர், பரமத்தி, ஈரோடு, திருச்சி, வேலூர், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் வெப்ப அலை வீசி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.