“பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்… அச்சப்பட வேண்டாம்..” - தமிழக அரசு அறிவிப்பு!
பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட HMPV தொற்று இந்தியாவில் நுழைந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 5 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் தமிழகத்தில் 2 பாதிப்புகள் அடங்கும். ஆனால் இது சீனாவில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று கிடையாது எனவும் ஏற்கனவே உள்ளதுதான் எனவும் இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.
அந்த வகையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
“HMPV வைரஸ் புதிதாக கண்டறியப்பட்டது கிடையாது. ஏற்கனவே 2001 இல் கண்டறியப்பட்டது தான். இந்த வைரஸ் தொற்றால் சென்னை மற்றும் சேலத்தில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்பிறகு தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட சுவாச வைரஸ் நோய்க்கிருமிகளில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்களுடன் ஆன்லைன் மூலமாக ஆலோசனை கூட்டம் நடத்தியது.
Human Metapneumovirus- Press Release#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin @mp_saminathan @Subramanian_ma pic.twitter.com/luBPgoMaVB
— TN DIPR (@TNDIPRNEWS) January 6, 2025
இந்த வைரஸ் தொற்றை நினைத்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தும்மல் மற்றும் இருமல் வரும்போது கையால் வாயை மூடி கொள்வதோடு அடிக்கடி கையை சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். இந்த நோய் தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.