மோசமான மலைப்பாதை ; மருத்துவமனைக்கு செல்லமுடியாமல் தவிப்பு - #ASRDistrict மக்களின் கோரிக்கை நிறைவேறுமா?
ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் சுந்தரி கொண்டா கிராமத்திற்கு போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டம் சுந்தரி கொண்டா கிராமத்திற்கு
சரியான போக்குவரத்து வசதி என்பது கிடையாது. அந்த கிராமத்திற்கு செல்வதற்காக பயன்படுத்தப்படும் மண் சாலை வழியாக ஆறு ஒன்று ஓடுகிறது. அதுவும் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், அந்த கிராமத்திற்கான போக்குவரத்து வசதி என்பது முழு அளவில் துண்டிக்கப்படும்.
இச்சூழலில் சமீபத்தில் பெய்த பெருமழை காரணமாக, அங்குள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்நிலையில் அக்கிராமத்தை சேர்ந்த பிறந்து நான்கு நாட்களே
ஆன குழந்தைக்கு, உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தாயையும், குழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் போக்குவரத்து வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள அணையில்
இருந்து, தண்ணீர் வெளியேறும் மதகின் கீழ் இருக்கும் சுவற்றின் மீது, மிகவும்
ஆபத்தான நிலையில் குழந்தையை தூக்கி கொண்டு ஒருவர் முன்னே சென்றார். அவர் முன்னே செல்ல மற்றொருவர் அந்த தாயை தோளில் அமர செய்து ஆபத்தான வகையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். சுவரில் இருந்து கொஞ்சம் கால்நழுவினாலும் இவர்களின் உயிர் அவ்வளவுதான். இவ்வாறு அபத்தான பயணங்களை இம்மக்கள் தினந்தோறும் மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.
அதிகாரிகள் மனது வைத்து, தங்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்க
வேண்டும் என அந்த கிராம மக்கள் பல வருடங்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் கோரிக்கை என்பது கோரிக்கையாகவே இருந்து வருகிறது.