”கடலோரப் பகுதியில் வாழும் மக்கள்...” - பொதுமக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்!
மத்திய தொழில் பாதுகாப்பு படை யின் (சி.ஐ.எஸ்.எஃப்.) 56வது ஆண்டு விழா கொண்டாட்டம் கடந்த மார்ச் 7ஆம் தேதி நடைபெற்றது. அப்போது குஜராத் மாநிலம், லக்பத் கோட்டை மற்றும் மேற்குவங்க மாநிலம் பக்காளி கடற்கரையில் இருந்து இரு பிரிவுகளாக சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் ‘பாதுகாப்பான கடல்வளம், செழிப்பான இந்தியா’ என்ற கருப்பொருளுடன் சைக்கிள் பேரணியை தொடங்கினர்.
இந்த சைக்கிள் பேரணியில் 14 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் 25 நாட்களில் 11 மாநிலங்களை உள்ளடக்கிய 6,553 கி.மீ தூரத்திற்கு கடுமையான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கிழக்கு கடற்கரை வழியாக சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ள சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க கோரி பொதுமக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், நம் நாட்டின் பெயர், நிம்மதி, சந்தோஷத்தை கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டுக்குள் புகுந்து கோர சம்பவங்களை செய்வாங்க. அதற்கு உதாரணம் மும்பையில் 26.11.2008 அன்று நடந்த தாக்குதலில் கிட்டதட்ட 160 உயிரிழப்புகள் ஏற்பட்டது.
கடலோரப் பகுதியில் வாழும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து சந்தேகத்திற்குரிய மக்கள் நடமாடினால் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி ஏற்படுத்த 100 சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கிலோ மீட்டர் வெஸ்ட் பெங்காலில் இருந்து கன்னியாகுமரி வரைக்கும் சைக்கிளில் பேரணியாக செல்கின்றனர். அவர்கள் உங்கள் ஏரியாவுக்கு வரும்போது, வரவேற்று, முடிந்தால் அவர்களுடன் கொஞ்சம் தூரம் சென்று உற்சாகப்படுத்துங்கள். வாழ்க தமிழ் மக்கள் வளர்க தமிழ்நாடு”
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.