For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அயோத்தியில் முதல் நாள் தரிசனத்திற்கு வரும் மக்கள் கூட்டம் - தற்காலிக கூடாரங்கள் அமைத்து உபி அரசு சிறப்பு ஏற்பாடு!

11:31 AM Jan 23, 2024 IST | Web Editor
அயோத்தியில் முதல் நாள் தரிசனத்திற்கு வரும் மக்கள் கூட்டம்   தற்காலிக கூடாரங்கள் அமைத்து உபி அரசு சிறப்பு ஏற்பாடு
Advertisement

அயோத்தியில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்,  தங்குவதற்கு தற்காலிக கூடாரங்கள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில்  பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் குடமுழுக்கு, குழந்தை ராமர் பிரதிஷ்டை நிகழ்வும் விமரிசையாக நடைபெற்றது. கோயில் திறப்பு விழாவிற்கு இந்தியா மட்டுமில்லமால் உலகம் முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பொது மக்களுக்கு திறப்பு விழா அன்று அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலால், அயோத்தி உலகளவில் பேசப்படும் நகரங்களில் ஒன்றாக மாறியுள்ளது.  அதன் காரணமாக மத்திய அரசும், மாநில அரசும் அயோத்தி நகரின் வளர்ச்சிக்காகவும், சுற்றுலா மேம்பாட்டிற்காகவும் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

அயோத்தியில் விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்டவற்றை அமைத்த மத்திய அரசு, உலகத்தரத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல திட்டங்களையும் அறிவித்துள்ளது. அதேபோல பிரபல தனியார் நிறுவனங்களும் தங்களது கிளைகளை நிறுவுவதற்கும் ஏற்பாடுகளை செய்து வருகின்றன. ஆண்டுக்கு 45 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்காக வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பக்தர்களின் எண்ணிக்கையிலும், வருவாய் ஈட்டுவதிலும் திருப்பதியை மிஞ்சும் அளவிற்கு அயோத்தி சிறந்து விளங்கும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ராமர் கோயில் திறப்பு விழாவை தொடர்ந்து அடுத்தகட்டமாக பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 7 மணி வரையிலும் தரிசனம் செய்யலாம் என்ற தகவலும் கோயில் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 6.30 மணிக்கும் இரவு 7.30 மணிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் எனவும், அந்த சமயங்களில் ராமரை தரிசிக்க இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராமரை தரிசிக்க பெருமளவு பக்தர்கள் வரவுள்ளதால் அயோத்தியில் அவர்கள் தங்குவதற்கு ஏதுவாக, நவீன கூடாரங்களுடன் தற்காலிக கூடார நகரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அயோத்தியின் 4 இடங்களில் இந்த தற்காலிக கூடார நகரங்களை ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளையும், அயோத்தியா வளர்ச்சி கழகமும் இணைந்து உருவாக்கியுள்ளன. முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு என 2 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ள கூடார அறைகள், 2 பேர் தங்குவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட சமையல் கூடங்களும், பிரபல சமையல் கலைஞர்களின் தலைமையில் சமையல் குழுக்களும் வரவழைக்கப்பட்டு, சைவ உணவு வகைகள் வழங்கப்படவுள்ளன.

ஆன்மீகம் சார்ந்த ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட கூடாரத்தில் கடும் குளிரை தாங்கும் வசதியும், கூடாரங்களின் முகப்பில் குளிரை சமாளிக்க உதவியாக தீமூட்டும் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தற்காலிக கூடார நகரங்களில் ராமாயண கதைகளும், கலாசார நடன மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும் எனவும், தற்காலிக கூடார நகரங்களின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் எனவும் அறக்கட்டளை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் ராமர் கோயில் மட்டுமின்றி அயோத்தியின் இதரப் பகுதிகளுக்கு சென்று வர வசதியாக, 50 மின்சார பேருந்துகளும், 200 மின்சார ஆட்டோக்களும் இயக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அறக்கட்டளை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் இந்த சிறப்பு ஏற்பாடுகள், நாடு முழுவதிலும் இருந்து அயோத்திக்கு வரும் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

Tags :
Advertisement