“அரசியலமைப்பு சட்டத்தின் மீதான மோடியின் தாக்குதல்களை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டனர்” - அமெரிக்காவில் #RahulGandhi பேச்சு!
அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதான பிரதமர் மோடியின் தாக்குதல்களை இந்திய மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளதை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நிரூபித்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்ற ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய - அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்த அங்குள்ள மக்களிடம் அவர் உரையாடல் நடத்தி வருகிறார்.
அந்த வகையில் அங்குள்ள புலம்பெயர்ந்த மக்களிடையே ராகுல் காந்தி பேசியதாவது:
“எங்கள் அரசியல் அமைப்புகளிலும், கட்சிகளிலும் இல்லாதது அன்பு, மரியாதை மற்றும் பணிவு என்று நான் நினைக்கிறேன். இந்திய அரசியலில் கட்சிகளிடையே அன்பு, மரியாதை மற்றும் பணிவு என்பது இல்லை. ஒரு சமூகம், ஒரு சாதி, ஒரு மதம், ஒரு மாநிலம், ஒரு இனம் என பாகுபாடு காட்டாமல் அனைத்து மனிதரையும் நேசியுங்கள். சக்திவாய்ந்த, அதிகாரம் படைத்தவர்கள் மட்டுமின்றி இந்தியாவைக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் அனைவருக்கும் மரியாதை செய்யுங்கள்” என்றார் ராகுல் காந்தி.
மேலும் அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதான பிரதமர் நரேந்திர மோடியின் தாக்குதல்களை இந்திய மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர். சமீபத்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அதனை நிரூபித்துள்ளதாகவும் ராகுல்காந்தி குறிப்பிட்டார். இந்தியாவில் இந்த முறை பிரதமரை கண்டும், பாரதீய ஜனதா கட்சியை கண்டும் மக்கள் அஞ்சவில்லை என்பதையும் தேர்தல் முடிவுகள் தெளிவாக்கி இருக்கின்றன. அரசியல் அமைப்பு சட்டம், மதம் மற்றும் மாநிலங்கள் மீதான தாக்குதல்களை இனியும் ஏற்கப்போவதில்லை என்பதை உணர்த்த இந்திய மக்களின் மகத்தான சாதனைகள் இவை என்றும் ராகுல்காந்தி கூறினார்.