"பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் சலிப்படைந்துள்ளனர்" - சமாஜ்வாடி கட்சி விமர்சனம்!
பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் சலிப்படைந்துள்ளனர் என சமாஜவாதி கட்சி மூத்த தலைவர் ஷிவ்பால் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதனிடையே 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. சமீபத்தில் சமாஜவாதி கட்சி முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் பதாயூன் தொகுதியில் அக்கட்சியின் மூத்த தலைவர் தர்மேந்திர யாதவ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அத்தொகுதி ஷிவ்பால் யாதவுக்கு மாற்றி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பதாயூன் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சமாஜவாதி கட்சி மூத்த தலைவர் ஷிவ்பால் சிங் யாதவ் எட்டாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
"பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் சலிப்படைந்துள்ளனர். பணவீக்கம், வரி, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் ஊழல் உச்சத்தில் உள்ளது. பாஜக அளித்த வாக்குறுதிகள் பொய்யானவை, வெற்றுத்தனமானவை. இந்த முறை சமாஜவாதி வேட்பாளர்களுக்கு மக்கள் வெற்றியை உறுதி செய்வார்கள்.
நாங்கள் உத்திர பிரதேசத்தில் வெற்றி பெற்றால் பாஜக அழிந்து விடும். மீதமுள்ள இடங்களுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். பதாயூன் தொகுதியில் இப்போதைக்கு, நான்தான் போட்டியிடுவேன். கட்சி என்ன வழிகாட்டுதல் கொடுத்தாலும் அதை பின்பற்றுவேன்."
இவ்வாறு அவர் கூறினார்.