இனி 65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் - இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!
இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மருத்துவ காப்பீடுகளை (பாலிசி) எடுப்பதற்கான வயது வரம்பு 65 ஆக இருந்தது. தற்போது இந்த வயது வரம்பை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) நீக்கியுள்ளது. அதாவது, இனி அனைத்து வயதினரும் மருத்துவ காப்பீட்டை எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்க நடைமுறை கடந்த ஏப்.1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஐஆா்டிஏஐ வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
"அனைத்து வயதினருக்கும் மருத்துவ காப்பீடுகளை வழங்குவதை காப்பீட்டு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். ஆணையம் அங்கீகரித்துள்ள மூத்த குடிமக்கள், மாணவா்கள், குழந்தைகள், கா்ப்பிணிகள் போன்ற பிரிவினருக்கான சிறப்பு மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களை காப்பீட்டு நிறுவனங்கள் வடிவமைக்கலாம். மேலும், எத்தகைய உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டோருக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களைக் கட்டாயம் வழங்க வேண்டும்.
காப்பீட்டுதாரா்களின் விருப்பப்படி, ப்ரிமீயம் தொகையை தவணை முறையில் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. பயண காப்பீட்டுகளைப் பொருத்தவரை பொது, மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே அவற்றை வழங்க முடியும். சித்த மருத்துவம், ஆயுா்வேதம், ஹோமியோபதி, யுனானி, இயற்கை மருத்துவம், யோகா ஆகிய மருத்துவ சிகிச்சைகளில் காப்பீட்டுக்கு எவ்வித எல்லை வரம்பும் இல்லை."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.