"இந்தியா முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை" - #VladimirPuthin
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போரை நிறுத்த இந்தியா அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன. ஆரம்பத்தில் ரஷ்ய அதிபர் புதினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன. பின்னர் ஜெலன்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது.
இந்த சூழலில், உக்ரைனின் பொல்டாவா பகுதியில் உள்ள மருத்துவமனை மற்றும் கல்வி நிலையத்தின் மீது, ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 219 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், "உக்ரைன்-ரஷ்யா இடையிலான போரை நிறுத்த இந்தியா அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம்" என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். மேலும், அவர் சீனா, பிரேசில் ஆகிய நாடுகளும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என தெரிவித்துள்ளார்.