For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கக்கூடாது!” - போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை!

03:56 PM Feb 13, 2024 IST | Web Editor
“கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கக்கூடாது ”   போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை
Advertisement

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னிபேருந்து பணிமனைகளை ஒருபோதும் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களாகவோ அல்லது பேருந்து நிலையமாகவோ பயன்படுத்த கூடாது மீறினால் அந்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் எச்சரித்துள்ளார். 

Advertisement

இது தொடர்பாக போக்குவரத்து ஆணையர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் பயணிகளின் முழு பயன்பாட்டிற்குக் கொண்டு வந்த பின்னர் அதனை எதிர்த்து ஒரு சில ஆம்னிப் பேருந்துகளின் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல மனுக்களை தாக்கல் செய்தனர்.  மேற்படி வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 09.02.2024 அன்று ஒரு இடைக்கால உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி வழக்கு தொடுத்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை புறவழிச்சாலையில் உள்ள போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி ஆகிய இரு இடங்களில் மட்டும் இடைக்கால ஏற்பாடாக பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு அனுமதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால்  சென்னை உயர் நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் பத்தி எண் 16-ல் சென்னை மாநகருக்குள் உள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளுக்கு வாகனங்களைக் கொண்டு வருவது குறித்து குறிப்பிட்டுள்ளதை ஒரு சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தவறாகப் புரிந்துக் கொண்டு அந்தப் பணிமனைகள் அமைந்துள்ள இடங்களிலும் பயணிகளை ஏற்றி இறக்கலாம் என தவறான ஒரு கருத்து உருவாக்கத்தை அனைத்து ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களிடையே தவறான செய்திகளை பரப்பி வருவது குறித்து இந்த துறையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு பணிமனைகள் அமைந்துள்ள இடங்களில் பொதுமக்களை ஏற்றி இறக்குவதற்கு உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் வழங்கவில்லை.  எனவே இதனை  தவறான கண்ணோட்டத்துடன்,  தங்களது லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் ஆம்னி பேருந்துகளின் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.  அது மட்டுமல்லாமல் அவ்வாறு செய்வது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு  உள்ளாகும் செயல் எனவும் தெளிவுப்படுத்தப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளவாறு சென்னை புறவழிச்சாலையில் அமைந்துள்ள போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகள் மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களாக தங்களது பேருந்து பயணச்சீட்டு முன் பதிவு செய்யும் செயலிகளில் குறிப்பிட பட வேண்டும் எனவும் பிற இடங்களை குறிப்பிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.  ஒரு சில ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் இந்த தவறான புரிதலின் காரணமாக பொது மக்களிடையே தேயைற்ற குழப்பத்தினை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

எனவே,  சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் அடிப்படையில் பயணிகளும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்குவதை தவிர்க்குமாறும் கேட்டுகொள்ளப்படுகிறது.  அதனை மீறுவதால் பயணிகளுக்கு தேவையற்ற சிரமங்கள் ஏற்படும் என்பதையும் மேலும் அத்தகைய நடவடிக்கை ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை கிளாம்பாக்கத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததை கேள்விக்குறியாக்கும் செயல் ஆகும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும் பணிமனைகளை ஒருபோதும் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களாகவோ அல்லது பேருந்து நிலையமாகவோ பயன்படுத்த இயலாது.  மேலும், சென்னை உயர் நீதிமன்றம் தனது 01.02.2024 அன்று பிறப்பித்த ஒரு இடைக்கால உத்தரவில் பத்தி எண் 17ல் குறிப்பிட்டுள்ளவாறு கிளாம்பாக்கம் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வந்த பின்னரே ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் குறித்த அறிய இயலும் என்பதாலும் அப்போது தான் அதற்கு ஏற்றவாறு அரசால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என்பதையும் உரிமையாளர்களும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

Tags :
Advertisement