For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மும்பை விமான ஓடுதளத்தில் அமர்ந்து பயணிகள் உணவருந்திய சம்பவம்: இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம்!

09:43 PM Jan 17, 2024 IST | Web Editor
மும்பை விமான ஓடுதளத்தில் அமர்ந்து பயணிகள் உணவருந்திய சம்பவம்  இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ 1 20 கோடி அபராதம்
Advertisement

மும்பை விமான நிலைய ஓடுதளத்தில், விமான பயணிகள் அமர்ந்து சாப்பிட்டது தொடர்பாக இண்டிகோ நிறுவனத்துக்கு மத்திய சிவில் விமான அமைச்சகம் ரூ.1.20 கோடி அபராதம் விதித்துள்ளது.

Advertisement

டெல்லியில் ஏற்பட்ட கடும் பனி மூட்டம் காரணமாக கடந்த ஜனவரி 14-ம் தேதி அன்று 150க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணிநேர தாமத்துக்குப் பின்பே இயக்கப்பட்டன. சென்னை, பெங்களூரு, கேரளாவிலிருந்து கிளம்பும் விமானங்களும் பனியால் திட்டமிட்ட நேரத்திற்கு இயக்க முடியாமல் பாதிக்கப்பட்டன. ஜன. 14-ம் தேதி மதியம் 1 மணிக்கு டெல்லியிலிருந்து கோவா செல்லவேண்டிய இண்டிகோ விமானம் சில மணி நேரமாகக் கிளம்பாமல் இருந்தது. இதனால் கோபமடைந்த பயணி ஒருவர் விமானியை தாக்கியுள்ளார்.

பின் மீண்டும் இதே விமானம் கோவாவில் இருந்து டெல்லி சென்ற நிலையில் அடர்ந்த மூடுபனி காரணமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ 6இ 2195 விமானத்தில் இருந்த பயணிகள் தரையிறங்கிய வேகத்தில் ஓடுதளத்துக்கு அருகில் உள்ள டார்மாக் (விமானங்கள் நிறுத்தும் இடம்) பகுதியில் அமர்ந்தபடி உணவும் உண்டனர். இந்த காட்சி இணையத்தில் விடியோவாக வெளியாகி வைரலானது. இந்தச் சூழலில் இது குறித்து மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையம் மற்றும் இண்டிகோ விமான நிறுவனம் விளக்கம் கொடுத்திருந்தது.

கோவாவில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய அந்த விமானம் குறித்த நேரத்தில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. டெல்லியில் நிலவிய மூடுபனி காரணமாக மும்பைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. மும்பையில் விமானத்துடன் படிகள் இணைக்கப்பட்ட நிலையில் பயணிகள் அதில் இருந்து வெளியேறிய நிலையில் ஓடுதளத்துக்கு அருகில் விமானம் நிறுத்தப்பட்ட டார்மாக் பகுதியில் அமர்ந்துள்ளனர். அந்த இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால், அதில் தோல்வியை தழுவினர் என விமான நிலைய செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்திருந்தார். மோசமான வானிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டதாகவும். இதற்கு தங்கள் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் இண்டிகோ நிறுவனம் அறிவித்தது.

இதனிடையே, மும்பை விமான நிலைய ஓடுதளத்தில், விமான பயணிகள் அமர்ந்து சாப்பிட்ட சம்பவம் தொடர்பாக இண்டிகோ நிறுவனத்துக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மேலும், மூடுபனி தொடர்பாக ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ளவும், விமான நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்வதிலும் இண்டிகோ மற்றும் மும்பை விமான நிலையம் இரண்டுமே கவனத்துடன் செயல்படவில்லை என்றும் அமைச்சகம் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் பயணிகள் ஓடுபாதையில், உணவு உண்ட சம்பவம் தொடர்பாக இண்டிகோ நிறுவனத்திற்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ரூ.1.20 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தை பராமரிக்கும் நிறுவனமாக MIALக்கும் ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் தேவைகளை கடைப்பிடிக்கத் தவறியதாகவும், விமான நிலையம் சார்பில் சமர்பிக்கப்பட்ட பதில் திருப்திகரமாக இல்லை என்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 

Tags :
Advertisement