For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

18வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பதவியேற்றார் பார்த்ருஹரி மஹ்தாப்!

10:25 AM Jun 24, 2024 IST | Web Editor
18வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பதவியேற்றார் பார்த்ருஹரி மஹ்தாப்
Advertisement

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று நடைபெற உள்ள இடைக்கால சபாநாயகராக பார்த்ருஹரி மஹ்தாப் பதவியேற்றார்.

18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது.  மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது.  240 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. எனினும், தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தது.

Advertisement

பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி கடந்த ஜூன் 9-ம் தேதி பதவியேற்றார்.  இந்தச் சூழலில், 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.  இதேபோல், மாநிலங்களவையின் 264வது அமர்வு ஜூன் 27-ம் தேதி தொடங்கி ஜூலை 3 வரை நடைபெறவிருக்கிறது.  ஜூன் 27-ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றவுள்ளார்.

மக்களவை கூட்டத் தொடரின் முதல் இரு நாள்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்கவுள்ளனர்.  மக்களவை இடைக்கால தலைவர் பர்த்ருஹரி மகதாப் முன்னிலையில் எம்.பி.க்கள் பதவியேற்பு நடைபெறும்.  ஜூன் 26-ம் தேதி மக்களவைத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில்,  நாடாளுமன்றத்தின் முன்பு காந்தி சிலை வைக்கப்பட்ட இடத்தில் இந்தியா கூட்டணியினர் ஒன்று கூட திட்டமிட்டுள்ளனர்.  மக்களவை கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில்,  ஒற்றுமையின் அடையாளமாக திகழும் காந்தி சிலை முன்பு ஒன்றுகூடிய பின்னர் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஒன்றாக 10.30 மணிக்கு மக்களவைக்குள்  நுழைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் "பார்த்ருஹரி மஹ்தாப்" பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Tags :
Advertisement