"பயத்திலிருந்து வரக்கூடிய கருத்துக்கள்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்துக்கு கனிமொழி எம்.பி பதில்!
2026 தேர்தலுக்குப் பிறகு திமுகவுக்கு வனவாசம் என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்துக்கு, பயத்திலிருந்து வரக்கூடிய கருத்துக்கள் தான் அது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில், கலைஞர் 100 வினாடி வினா அரை இறுதி போட்டி இன்று (நவ.22) நடைபெற்றது. இதில் திமுக எம்.பி கனிமொழி பங்கேற்று
போட்டியில் கலந்துக்கொள்ளும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி. பேசியதாவது,
"கலைஞர் 100 வினாடி வினா போட்டியின் முதல் சுற்றில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நாளை நடைபெறும் இறுதி போட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்க உள்ளார். அதானி வழக்கு குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்படும். என்ன மாதிரி கேள்விகள் எழுப்பப்படும் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
2026 தேர்தலுக்குப் பிறகு திமுகவுக்கு வனவாசம் என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கனிமொழி எம்.பி., "அதிமுகவுக்கு எந்த வேலையும் இல்லாததால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எல்லோருக்கும் ஆறுதல் சொல்ல தொடங்கிவிட்டார். பயத்திலிருந்து வரக்கூடிய கருத்துக்கள் தான் அது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.
நீர்நிலைகள் முழுவதும் ஆழப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்காமலும், பிரச்னைகளை குறித்து ஆய்வு மேற்கொள்ளாமலும் இருப்பது வருந்தத்தக்க, கண்டனத்துக்குரியதாக உள்ளது" என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.