"திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள்" - டிடிவி தினகரன் பேட்டி!
விழுப்புரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அமமுக கட்சி நிர்வாகி திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தின் காரணமாகவும், தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை நிறைவேற்றும் விதமாக தேசிய ஜனநாயக கூட்டணியை அமித்ஷா வலுப்படுத்தி வருவதால் இந்த முயற்சிக்கு பங்கம் ஏற்படுத்தும் விதமாக கருத்து சொல்வது நாகரிகமாக இருக்காது. கூட்டணியில் உள்ள தலைவர்கள் அவர்களின் விருப்பத்தை சொல்கிறார்கள்.
திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் மாநிலத் தலைவர் சண்முகம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திமுக தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் தான் மக்களை தைரியமாக சந்திக்க முடியும் என
கூறுகிறார். எனவே திமுக கூட்டணி, எங்கள் கூட்டணி பார்த்து பயப்படுகிறது எங்கள் கூட்டணி உறுதியாக திமுகவை வீழ்த்தி தமிழ்நாட்டில் மக்களாட்சியை, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி போன்ற ஒரு நல்லாட்சியை, சட்டம் ஒழுங்கு சரியான பராமரிக்கும் ஆட்சியை, கொலை கொள்ளை இல்லாத ஆட்சியை, கூலிப்படைகள் இல்லாத ஆட்சியை, காவல்துறை மக்களின் நண்பர்களாக செயல்படுகிற ஆட்சியை உறுதியாக உருவாக்குவோம் என தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்பதை நயினார் நாகேந்திரன் கேட்டால்தான் தெரியும். உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரப்பெற்று திமுகவை வீழ்த்துவோம். இன்றைக்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என தெரியவில்லை. விசாரணை என அழைத்து சென்று காவல் நிலையத்தில் கொலை செய்யும் நிலை உள்ளது. ஓராண்டுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் கலாச்சாராய மரணங்கள் மக்களை எப்படி வாட்டி வதைத்தது என்பதை பார்த்தோம். தமிழக முழுவதும் போதை பொருள் கலாச்சாரம் பெருகி வருகிறது. அதை எல்லாம் முறியடித்து நல்லதொரு ஆட்சியை வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.
அதனை உறுதியாக நாங்கள் உருவாக்குவோம். அதனால் எங்கள் கூட்டணி இன்னும் பலம் பெறும். எங்கள் கூட்டணி ஒன்றுகூடி செயல்பட்டு, இன்னும் பலம் பெற்று திமுக வீழ்த்துகிற கூட்டணியாக செயல்படும் என கூறினார். திமுக எனும் தீய சக்தியை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் கட்சிகள் எல்லாம் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள். திமுக ஆட்சி இருக்கும் கொஞ்ச நாளைக்காவது சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வேலையை முதலமைச்சர் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.