For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் - அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடக்கம்!

11:43 AM Jul 21, 2024 IST | Web Editor
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்   அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடக்கம்
Advertisement

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் மத்திய அரசின் அழைப்பின்பேரில் இன்று (ஜூலை 21) அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது.

Advertisement

மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரில் மக்களவையின் புதிய உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 22) தொடங்குகிறது.


2024 – 2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நடைபெறும் அல்வா தயாரித்து விநியோகிக்கும் நிகழ்ச்சி ஜூலை 16 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர், உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். வழக்கமான முறையில் பூஜை சடங்குகளையொட்டி தயாரிக்கப்பட்ட அல்வாவை அதிகாரிகளுக்கும் ஊழியா்களுக்கும் நிதியமைச்சர் வழங்கினார்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக இன்று (ஜூலை 21) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்தக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் பிரதான கமிட்டி அறையில் இந்தக் கூட்டம் தொடங்கியது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, பிரமோத் திவாரி, சஞ்சய் சிங், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பல தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்தனர். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ தலைமையில் அனைத்து கட்சிகளின் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கியது.

இதனையடுத்து நாளை (ஜூலை 22) தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசின் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் (ஜூலை 23) மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளதால், மத்திய பட்ஜெட்டில் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

Tags :
Advertisement