பாரிஸ் ஒலிம்பிக் போட்டி: வில்வித்தையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!
பாரிஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரிஸ் நகரில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த தொடரில் இந்தியா இதுவரை 2 பதக்கங்கள் வென்றுள்ளது.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது. இன்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்கெயின் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்நிலையில், இன்று நடந்த வில்வித்தை போட்டியில் பெண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 6-2 என்ற கணக்கில் டச்சு வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இதையும் படியுங்கள் : வயநாடு நிலச்சரிவு – கேரள முதலமைச்சரிடம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு!
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜெர்மன் வில்வித்தை வீராங்கனையான மிச்செல் க்ரோப்பனை எதிர்த்து, வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி மதியம் நடக்கும் பெண்களுக்கான தனிநபர் வில்வித்தைக்கு முந்தைய காலிறுதிப் போட்டியில் தீபிகா மோதுகிறார்.