ஹரியானாவில் மேலும் ஒரு காவல் அதிகாரி தற்கொலை : ஐபிஎஸ் பூரன் குமார் மறைவில் திடீர் திருப்பம்!
ஹரியானாவை சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார் கடந்த 7-ம் தேதி தனது இல்லத்தில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்கொலை முன் அவர் எழுதி வைத்த கடிதத்தில் ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மற்றும் ரோஹ்தக் எஸ்எஸ்பி உள்ளிட்ட முத்த மூத்த அதிகாரிகளால், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் சாதி அடிப்படையில் துன்புறுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து புரன் குமாரின் மனைவியான அம்னீத் பி குமார் ஐஏஎஸ், மாநில முதல்வரிடம் மனு அளித்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க சண்டிகர் ஐஜிபி தலைமையில் ஆறு பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.
இந்நிலையில் ரோஹ்தக்கில் உள்ள சைபர் செல் பிரிவில் ஏஎஸ்ஐ ஆக பணியாற்றி வந்த சந்தீப் குமார் என்பவர் இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்னர் சந்தீப் குமார் எழுதி வைத்த கடிதத்தில், ”புரன்குமார் ஊழல் அதிகாரி. தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிப்பட்டு விடும் என்ற பயத்தினால் தற்கொலை செய்து கொண்டார்.
அவருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன. நான் இறப்பதற்கு முன்னர் ஊழல் அமைப்பை வெளிப்படுத்த விரும்பினேன். பாரபட்சமற்ற விசாரணை வேண்டி எனது வாழ்க்கையை தியாகம் செய்கிறேன்.தனது கடமையில் இருந்து தப்பித்துக்கொள்ள புரன் குமார் ஜாதி அரசியலை பயன்படுத்தினார்''என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் வீடியோ பதிவு ஒன்றையும்வெளியிட்டுள்ளார்.
ஹரியானாவில் அடுத்தடுத்து இரண்டு போலீஸ் அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.