பாரிஸ் ஒலிம்பிக் : வில்வித்தை கால் இறுதி போட்டியில் இந்தியா தோல்வி!
சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரிஸ் நகரில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இதில் மூன்றாவது நாளான இன்று (ஜூலை 29) ஆடவர் வில்வித்தை கால் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா - துருக்கி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணி சார்பில் தருந்தீப் ராய், பிரவீன் ஜாதவ், பொம்மதேவர திராஜ் ஆகியோர் விளையாடினர். முதல் இரண்டு செட்டுகளை 53-க்கு 57 மற்றும் 52-க்கு 55 என்ற கணக்கில் துருக்கி அணி கைப்பற்றியது. அதன்பின் 3வது செட்டை இந்திய வீரர்கள் 55-க்கு 54 என்ற கணக்கில் கைப்பற்றினர்.
மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கிய ஆட்டத்தில், இந்திய வீரர்கள் 4வது செட்டை கைப்பற்றி சமன் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. துருக்கி அணி 57-க்கு 54 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம் இந்திய அணி 2-க்கு 6 என்ற கணக்கில் துருக்கி அணியிடம் தோல்வியை தழுவி பதக்க வாய்ப்பை கோட்டைவிட்டது.
🇮🇳 Result Update: India Men’s Archery Recurve Team Quarter-finals
The trio of Dhiraj Bommadevara, Tarundeep Rai and Pravin Ramesh Jadhav lose in the quarterfinals stage of the 🇫🇷#ParisOlympics2024. pic.twitter.com/WWOP3HryRR
— SAI Media (@Media_SAI) July 29, 2024
இந்த வெற்றியின் மூலம் துருக்கி அணி அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறியது. மூன்றாவது நாளில் இந்திய வீரர்கள் பெரிய அளவில் சோபிக்க தவறினர். துப்பாக்கிச் சுடுதலில் ரமீதா ஜிந்தல் ஏமாற்றம் அளித்தார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதிப் போட்டியில் 7வது இடத்தை பிடித்து பதக்க வாய்ப்பை நூலிழையில் இழந்தார். அதேபோல் ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் அர்ஜூன் பபுதா இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவினார்.
முதல் 4 சுற்றுகள் முடிவில் இரண்டாவது இடத்தில் இருந்த அர்ஜூன் பபுதா கடைசி நேரத்தில் சொதப்பி பதக்க வாய்ப்பை கோட்டைவிட்டார். அதேநேரம் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாகெர், சர்போஜித் சிங் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். அதேபோல் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அர்ஜென்டினாவை 1-க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்தது.