இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்...10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வெண்கலம்!
பாரிஸ் ஒலிம்பிக் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்று அசத்தியுள்ளது.
பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் 2024ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 100 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸில் கோலகலமாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், ஷரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்தை வென்றது.
2024 ஒலிம்பிக் போட்டிகளில் இது இந்தியாவின் இரண்டாவது பதக்கமாகும். 16-10 என்ற கணக்கில் தென் கொரியாவின் வோன்ஹோ லீ மற்றும் ஜின் யே ஓ ஜோடியை வீழ்த்தி இந்தியாவின் இரண்டாவது பதக்கத்தை பெற்றுள்ளனர்.
ஏற்கனவே 10 மீட்டர் தனிநபர் ஏர்பிஸ்டல் மகளிர் பிரிவில், மனு பாக்கர் வெண்கலம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் முதல் துப்பாக்கி சுடும் வீரராங்கனை என்ற பெருமையையும், ஒரே ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் மனு பாக்கர் பெற்றார். இதன்மூலம் சரப்ஜோத் சிங் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் ஆறாவது துப்பாக்கி சுடும் வீரர் என்ற பெருமையை பெற்றார்.